http://www.tamilblogger.com/

http://www.tamilblogger.com/

Posted in Uncategorized | Leave a comment

வௌவால்

சிறுகதை

வௌவால்

சத்யானந்தன்

முதல் மாடி பால்கனியிலிருந்து ‘மெயின் கேட்’ மங்கலாகத் தெரிந்தது. அதிகாலையில் நடைப் பயிற்சி செய்பவர்கள், பால் வாங்குபவர்கள் உதிரியாக வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். டெல்லியின் அக்டோபர் மாதத்து வருடலான குளிருடன் வீசிக் கொண்டிருந்த காற்றை ரசிக்க முடியவில்லை.

வயிறு தொடர்ந்து விடியப் போகிறது என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அதை மறக்க பால்கனிக்கு உள்ளேயே மெதுவாக நடந்தாள். ஒரு ‘ஹாங்கர்’ உள்ளாடைகள் மற்றும் அவற்றைப் பிணைத்த ‘க்ளிப்’ சகிதம் கீழே விழுந்தது. பூ வேலை செய்த, மிருதுவான வெளிநாட்டு ‘ப்ராண்ட்’ உள்ளாடைகள் இரண்டு நாளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அம்மா பழக்கியதாலோ என்னவோ இப்படி உள்ளாடைகளை பாலகனியில் காயப் போடவே தன்னால் முடியாது. இந்த அளவு அதில் பணம் போடவும் தான்.

அதை இருந்த இடத்தில் மாட்டி வைத்தாள். இங்கே வந்து இது இரண்டாவது வாரம். முதல் வாரம் இது போல் கண்ணில் தென்பட்டதை அதற்குரிய இடத்தில் வைத்து ஒற்றை அறை, ஹால், சமையலறை, அத்தனையையும் ஒழுங்கு படுத்தியபடி தான் இருந்தாள். இனி அது தேவையில்லை. தனக்கென ஒரு கட்டில் வாங்கியாகி விட்டது. அதற்குக் கீழே பெட்டியை வைத்துத் தனித்துக் கொண்டாகி விட்டது.

அம்மா கொடுத்தனுப்பிய சத்து மாவுக் கஞ்சி காலையில், மதியம் ஆபீஸ் கான்டீன், இரவில் தயிர் சாதம், ஆம்லேட், பிரெட் என ஒப்பேற்றியாகிறது.

வயிறு தொடர்ந்து பிடிவாதம் பிடித்தது. தைரியம் அனைத்தையும் ஒன்று கூட்டி பாத்ரூம் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். ‘வெஸ்டர்ன் க்ளோஸட்’டின் மேற்பக்கம் மட்டுந்தான் தெரிந்தது. ஒரு கையால் பாத்ரூம் நிலையைப் பிடித்தபடி ஒரு எட்டு எடுத்து வைத்து ‘க்ளோஸட்’டின் உட்பக்கம் பள்ளத்தைப் பார்த்தாள். வௌவால் ஒரு பனிப்பாறை போலத் தலையை நீட்டிக் கொண்டு தான் இருந்தது. க்ளோஸட்’டின் உட்புறம் மீது ஒட்ட முயன்று மற்றுமொரு முறை வழுக்கியது. நனைந்த சிறகுகளை விரிக்க முயன்று ஈரம் தாங்காது தோற்று ஆனால் உயிரை விடாது போராடிக் கொண்டிருந்தது.

கழிவு நீர் வெளியேறும் குழாய்கள் படாதவாறு ஒரு கட்டிடத் திட்டம். அறு கோணமாய் அமைந்த வளாகத்தின் இரண்டு குடியிருப்பு சந்திக்கும் இடமும் அறு கோணத்தில் ஒரு முனையும் ஒன்றே. ‘சிமெண்ட் க்ரில்’ வைத்து கழிவு நீர்க் குழாய்களை மறைத்திருந்தார்கள். அரையிருட்டும் நான்கு மாடி வரை உட்குழிவான குழாய் தவிர்த்த வெற்றிடம் வௌவாலுக்கு வசதியாய் இருந்தது. அதே ‘சிமெண்ட் க்ரில்’ கழிப்பறை மற்றும் குளியலறை மூலையில் சாளரமாயும் அமைய வௌவால் இரவு இருளில் உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.

விடியற்காலை பாத்ரூம் விளக்கைப் போட்டதும் வீல் என்று அலறி விட்டாள். இன்னும் கொஞ்சம் பலமாகக் கத்தியிருந்தால் காலனியிலுள்ள அக்கம்பக்கத்தவர் எழுந்து வந்திருப்பார்கள். ஹாலுக்கு வந்து கட்டிலில் விழுந்தாள். வியர்வை அடங்க, இதயத் துடிப்பு சீர் பட அரை மணி ஆனது. ‘சிபிடபள்யூடி’யின் ‘சர்வீஸ் சென்டர்’ திறக்க காலை மணி பத்தாகும். ஏதேனும் செய்தே ஆக வேண்டும். கழிப்பிடக் குழாயைத் தவிர்த்து குளியல் குழாயில் ஒரு வாளி தண்ணீர் பிடித்துத் தள்ளி நின்றபடி பலத்தைத் திரட்டித் தண்ணீரை ‘க்ளோஸட்’டின் மீது ஊற்றினாள். வௌவால் தண்ணீரில் மிதந்து மேலெழும்பி வந்து சுவாசித்துப் போராடி தலையை நீட்டித் தத்தளித்துக் கொண்டிருந்தது. என்ன செய்ய? தன்னையுமறியாமல் வீட்டுக்கு மொபைலில் போன் செய்தாள். பிரபாகர் மொபைலை ஆஃப் செய்திருந்தான். குழந்தை ஸ்கூலுக்குப் போகும் நாட்களிலேயே அவன் தன் வசதிப்படி தான் எழுந்திருப்பான். நவராத்திரி லீவு இப்போது. இவனும் பையனும் இரவு ‘ஏஎக்ஸென்’ அல்லது ‘ஈஎஸ்பிஎன்’ பார்த்து விட்டு வெகு நேரம் கழித்துத் தூங்கப் போயிருக்கலாம். டெல்லி வந்ததுமே ஒரு ‘ப்ரீ பெய்ட்’ கனெக்ஷன் எடுத்தாள். பெரிதும் இவள் தான் சென்னைக்கு போன் செய்கிறாள். ஒரே ஒரு முறை பிரபாகர் போன் செய்து ‘எலெக்ட்ரிஸிடி கார்ட்’ எங்கே என்று கேட்டான்.

‘லேப் டாப்’ பை எடுத்து ‘ப்ராஜக்ட்’டில் கவனத்தைத் திருப்பினால் என்ன? ஒப்பந்தம் செய்த கம்பெனியிடம் அவர்கள் கேட்டதை ஒட்டியும் நீட்டியும் வேறு மென்பொருள் என்னென்ன தேவைப்படும் என ஒரு தூண்டில் போடச் சொல்லியிருந்தான் பவன் குமார். இயந்திரம் களை கட்டிய போது நேற்று கிளம்பிய அவசரத்தில் அலுவலக ‘சர்வர்’ கணிப்பொறியிலிருந்து ‘லேப் டாப்’புக்கு ‘அப் டேட்’ செய்யாமல் விட்டது நினைவுக்கு வந்தது. இனி அலுவலகம் போய் தான் எதுவும் செய்ய முடியும்.

“நேற்று மாலை கிளம்பும் போது ‘எங்கே போக வேண்டும்?’ என்றான் பவன் குமார். “முனிர்காவில் ஒரு மடக்குக் கட்டில் வாங்க” என்றாள்.

“நான் உடன் வரவா?” திட்டவட்டமாக மறுத்ததும் கை குலுக்கிக் கிளம்பி விட்டான். டெல்லியில் கை குலுக்குவதும் தட்டிக் கொடுப்பதும் சகஜம் தான். ஆனால் அவன் நெருங்க முயலும் பிற கணங்கள் இந்த செய்கைகளில் அவளுக்கு அச்சம் தந்தன. ஆள் உஷாரானவன். இன்னும் காத்திருக்கத் தயார் என்பது போல் ஒதுங்குவான். நிறைய டெலிபோன் அழைப்புக்கள் வருகின்றன. காத்திருப்பது பழக்கமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம்.

இரண்டு நாள் முன்னால் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த போது அறையில் தனதென்று ஒதுக்கிய கட்டில் மற்றதுடன் சேர்ந்து விரிப்புகள் கசங்கி இருந்த போது அருவருப்பு குமட்டி மேலெழுந்தது.

காலி செய்யலாம் என்று கண நேரம் தோன்றியது. அரை மணி நேர தூரத்தில் ஆபீஸ். ‘ப்ராஜக்ட்’ முடியும் வரை சகித்தால் திரும்பி சென்னை போய் விடலாம்.

அரசாங்க ஊழியர் என்று குடியிருப்புக் கிடைத்ததில் பெருமிதமா? இல்லை நான் குடியிருக்க வந்தவள் என்பதால் இளப்பமா? கொஞ்சமாவது நாசூக்கு வேண்டாமா? வாரக் கடைசியில் வெளியே தங்குவது போதாது என்று வீட்டுக்குள்ளேயே பகலில்! திட்டவட்டமான எதிர்ப்பைக் காட்டாவிட்டால் தான் வீட்டில் இருக்கும் போதே அது நிகழலாம்.

‘முனிர்கா’வில் மடக்குக் கட்டில் சல்லிசாகக் கிடைக்கும் என்று கேட்டறிந்தாள். ஒரு பெரிய ‘ப்ளைவுட்’ ஆறடி இருக்கக் கூடியதை இரண்டாக வெட்டி நாடாக் கட்டிலில் வருவது போல, மடக்கக் கூடிய வளைந்த இரும்புக் குழாய் கால்கள். அறுநூறு என்று ஆரம்பித்து நானூற்று ஐம்பதுக்கு விலை படிந்தது. மூணு சக்கர தட்டு வண்டிக் காரன் இரவுக்குள் கொண்டு வர முப்பது ரூபாய் கேட்டான். வயதானவன். பதினோரு மணிக்கு மேல் வந்தவன் அதை ஹாலில் மூலையில் பிரித்துப் போட்டு மெத்தையை அறையிலிருந்து மாற்றிக் கொடுத்தான். இரண்டு மாடி எப்படித்தான் தூக்கினானோ? இரவு பத்து மணிக்கு மேல் ‘லிஃப்ட்’ கிடையாது.

நன்றாக வெளுக்க ஆரம்பித்து விட்டது. பறவைகளின் கதம்பமான ஒரிகள் டெல்லியில் மரம் நிறைய என்பதைச் சுட்டுவது போல அடர்த்தியான சத்தமான பறவைச் சீழ்கைகள்.

‘சொத்’ என்று வந்து விழுந்தது செய்தித்தாள். ஒரு உருட்டுக் கட்டை போல சுருட்டி ‘ரப்பர் பேண்ட்’ போட்டு மூன்று மாடி நான்கு மாடி வரை பால்கனியில் விழுகிற மாதிரி குறி வைத்து எறிகிறார்கள். அனேகமாகக் குறி தப்பாது.

வயிற்று சங்கடம் ஒரு வலியாக நின்று விரட்டுவதைக் குறைத்திருந்தது. ஆபீஸ் பஸ் வர இன்னும் ஒரு மணி நேரந்தான் இருக்கிறது. அதுவரை எப்படியாவது சமாளிக்கலாம். ஆனால் ஆபீஸில் நுழைந்த உடன் ஒரு நிமிட அவகாசம் கிடைப்பது அரிது.

கீழே நடைபாதை தளத்தில் யாரோ நகர்வது தெரிந்தது. நேற்று கட்டில் கொண்டு வந்த ஆள். தள்ளு வண்டியை ஓட்டாமல் தள்ளியபடி அவளது மாடிப்படி பக்கத்திலிருந்து மெயின் கேட் நோக்கி நகர்கிறான். நியூஸ் பேப்பரை கட்டோடு அவன் பக்கம் வீசினாள். அவனுக்கு முன்பே அது விழுந்தாலும் அவன் கவனத்தை ஈர்த்தது. ‘ஒரு நிமிடம் மேலே வா’ என்று சைகை செய்தாள். அவன் கதவைத் தட்டி உள்ளே வந்ததும் ஹிந்தியில் எதையும் முயற்சிக்காமல் நேரே பாத் ரூமுக்கு அழைத்துப் போனாள். ஓடி வந்து ஹாலில் அமர்ந்தாள். அவன் கைப்பிடியில் அது வீச் வீச் என கத்தியபடி இருக்க அவன் அதனுடன் வெளியேறினான். எதாவது பணம் தரலாம் என எண்ணிய போது இரண்டு மூன்று நிமிடமாகியும் ஆளைக் காணவில்லை. பால்கனியிலிருந்து பார்த்த போது தன் வண்டியோடு நகர்ந்து கொண்டிருந்தான்.

முதல் காரியமாக நிறையத் தண்ணீரை ஊற்றினாள். பயன் படுத்தி நிம்மதியாக வெளியே வந்ததும் சென்னைக்கு போன் செய்யலாமா என்று எண்ணினாள். நேரமின்மையை மனதில் கொண்டு அதைக் கை விட்டாள்.

வென்னீர் தயாராவதற்குள் கஞ்சி கொதித்து முடிந்தது.

சோப் வைக்கும் இடத்தில் தினமும் எரிச்சலூட்டும் அந்த புதிய சோப் டப்பா கண்ணில் பட்டது. ஆண்கள் பயன்படுத்தும் சோப். முழு கட்டி மீது முடிகள் அழுந்தி ஒட்டியிருந்தன.

அதை எடுத்து ஒரு முறை முகர்ந்து, இருந்த இடத்தில் வைத்து விட்டுத் தனது சோப்பில் குளிக்கத் துவங்கினாள்.

Posted in சிறுகதை | Leave a comment

சிரிப்பு

சிறுகதை

சிரிப்பு

சத்யானந்தன்

(கணையாழி மார்ச் 2005 இதழில் வெளியானது)

“இதப் பாருடா…” என் தோளில் தட்டினான் என் தம்பி. ‘பிரெட்’ கடை சாலையின் மறு பக்கம் இருந்தது. இன்றைக்கு பத்தாம் நாள். டெல்லியிலிருந்து காஸியாபாத் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்றார் அப்பா. எங்களையெல்லாம் ஸ்டேஷனில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸிலிருந்து அழைத்து வரும் போதே.

“உடனே பாரேன்” என்னை அவசரப்படுத்தும் அவன் குரலில் அடக்க முடியாத சிரிப்பு கலந்திருந்தது. சாலையில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களிலிருந்து கவனத்தைத் திருப்பி அவன் காட்டிய இடத்தில் ஒரு பார்க். சுற்றிலும் மரங்கள். இடையே புல்வெளி. அதன் குறுக்கும் நெடுக்குமாக ஒற்றையடி கிரானைட் தடம். நிறைய சிறுவர்கள் குழுக்களாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். “விளையாடறாங்க.. இதுல என்ன இருக்கு?” என்றேன். அந்த புளூ – ரெட் கோடு போட்ட டீ ஷர்ட் பையனைப் பாரு” என்றான். அந்தப் பையன் பத்து வயது போலத் தெரிந்தான். அவனுக்கு மூன்று வயதுப் பையன் ஒருவன் கசங்கிய முழுக்கை சட்டை மட்டும் போட்டு அரை நிர்வாணமாய் பெளலிங் போட்டுக் கொண்டிருந்தான்.

என் தம்பிக்காக 90% செயற்கையாக ஒரு சிரிப்பை உதிர்த்தேன். இன்று காலை இந்தியா கேட் தாண்டி வரும் போது நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் ‘கத்திப்பாரா’ சந்திப்பின் முக்கால் திட்டத்துக்கு ஒரு பூங்கா இருந்தது. அந்த மாதிரி சந்திப்பை என் அப்பா “கோல் சக்கர்” என்கிறார். அந்தப் பூங்காவில் பேட்டிங் செய்கிற வயதுப் பையன் அவனை விட சற்றே சிறிதான ஒரு பெண்ணை மல்லாக்கக் கிடத்தி மேலே கவிந்து கொள்ள முயல அவளும் சுற்றியுள்ள அழுக்கு ஆடைக் குழந்தைகளும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் சிரிப்பு வந்தது. தம்பிக்கும் காட்டலாம் என நினைத்தேன். அம்மா எனக்கு மீசை முளைத்ததிலிருந்தே நான் என்ன பேசினாலும் செய்தாலும் உன்னிப்பாக கவனித்து அதில் பாதிக்கு மேற்பட்டதைத் தப்பு என்கிறாள். டிவியைக் கூட நிம்மதியாகப் பார்க்க விட மாட்டேன் என்கிறாள்.

காலை மணி பத்து. டெல்லி வெய்யில் சுள்ளென்று குத்தியது. பால்கனியிலிருந்து அப்பா அடையாளம் காட்டுமளவு கிட்ட இருந்துமே ரொட்டி வாங்கி வருவது இந்த வெய்யிலில் சிரமமான காரியமாய் தோன்றியது. அம்மா சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது காஸியாபாத் போய் அங்கேயே குளித்து படையல் முடிந்து பிறகு சாப்பிட வேண்டும். சிறியவருக்கு பிரெட், அப்பாவும் அம்மாவும் இன்னோரு காப்பி குடித்துக் கொள்வார்களாக இருக்கும்.

அப்பாவின் ‘குவார்ட்டர்ஸ்’ ஸில் ‘பார்க்கிங் லாட்’ விஸ்தாரமாயிருந்தது. ஒரு க்வாலிஸ் காரை நெருங்கும் போது தமிழில் பேச்சுக் குரல் கேட்டது. காரைத் துடைத்துக் கொண்டிருந்த முண்டா பனியன் போட்ட ஒருவர் தன் மகனை காரின் மீது ஏறக் கூடாது என்று விரட்டிக் கொண்டிருந்தார். எல்லாக் கார்களின் மீதுமே நிறைய புழுதி படிந்திருந்தது. ஒரு முன் பக்கக் கண்ணாடி மீது அப்பியிருந்த புழுதியில் யாரோ ஒருவன் பூஜா என்கிற பெண் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தி இருந்தான். எனக்கு அது வியப்பு தருவதாக இருந்தது. ஒரு வேளை அவளுக்குப் புரிகிற மாதிரி செல்லமான அல்லது குறிப்பான பெயரை வைத்து எழுதி இருப்பானோ? ‘பார்க்கிங்’ கைத் தாண்டி குடியிருப்பின் கீழ் தளத்தில் நுழைய ஒரு பக்கமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் உரசாமல் எதிர் வருகிறவர்களுக்கும் வழி விட்டு நடந்து வருவது மிகவும் சிரமாமியிருந்தது. லிஃப்ட்டில் வருவதில் தம்பிக்கு சந்தோஷம். நாங்கள் இருவரும் ஏறியதும் ஒரு பையன் நவீன சைக்கிளுடன் உள்ளே நுழைந்தான். அதன் முன் சக்கரத்தை ஒருக்களித்து அவனும் லிஃப்டுக்குள் நுழைய வசதியாக நானும் தம்பியும் மூலைக்குத் தள்ளப் பட்டோம். நல்ல வேளை அவன் மூன்றாவது மாடியிலேயே இறங்கி விட்டான். அவன் ஐந்தாவது மாடியில் இறங்கி இருந்தால் நானும் தம்பியும் திரும்பி வரும் வழியில் தான் நான்காம் மாடியில் இறங்கி இருக்க முடியும். வீட்டில் நுழையும் போது ” நான் என்னடி பண்ணட்டும்? என் பாஸ் என்னை விட மாட்டேங்கறாரு. கூட வேலை பாக்குற தமிளனுங்க எனக்கு டிரான்ஸ்பர் கிடைக்காததைப் பத்தி விதவிதமா ஜோக் சொல்லி சிரிக்கிறாங்கன்னா நீ ஒரேயடியா நான் இங்கே என்ஜாய் பண்ணுற மாதிரி பேசறியே? பொங்கித் திங்கிறதில உள்ள கஷ்டம் எனக்குத் தானே தெரியும்.”

“ஏன்? உங்க அண்ணன் வீட்டுக்குப் போனீங்களே என்னாச்சு? இப்ப செத்துத் தெய்வமாயிட்டாரே உங்க அப்பா அவுருக்கே சரியா சோறு போடலை அந்தப் புண்ணியவதி. அதான் இங்க தனியாப் பொங்குறீங்க..”

நாங்கள் நுழைந்ததும் பேச்சுத் தடை பட்டது. டெலிபோனில் சிரித்துப் பேசும் அப்பா அம்மா டெல்லியிலோ, சென்னையிலோ நேரில் பார்த்தாலே ஒரே சண்டை. சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“காஸியாபாத்”துக்கு அப்பா பஸ்ஸில் தான் கூட்டிப் போனார். பஸ்ஸின் மேற் கைப்பிடியைப் பிடித்த படி வந்த ஒருத்தியின் டீ சர்ட் சற்றே விலகி வெள்ளை வெளேரென அவள் இடுப்பையும் தொப்புளையும் காட்டியது. அம்மா தூங்கி விட்டாள். நிம்மதியாக ரசிக்க முடிந்தது. என் அருகில் இருந்தவன் ஒரு ‘ஸ்டாப்’பில் இறங்க அவள் என் அருகிலேயே அவர்ந்து விட்டாள். ‘பர்ஃப்யூம்’ வாசனை கிறங்க அடித்தது. உரசியபடி அவள் உட்கார்ந்து செல் போனில் பேச ஆரம்பித்து விட்டாள். எனக்கு சந்தோஷமாகவும் கூச்சமாகவும் இருந்தது. அடிக்கடி ‘க்ளுக்’ என்று சிரித்தபடி வெகு நேரம் பேசினாள். ‘போஸ்ட் பெய்ட்’ கனெக்ஷனாகத்தான் இருக்க வேண்டும்.

காஸியாபாத் பஸ் ஸ்டாண்டு பெரியப்பா வீட்டில் இருந்து மிகவும் தள்ளி இருந்தது. நான்கள் போன உடன் அப்பா அம்மாவைக் குளிக்கச் சொல்லி பெரியப்பா அவசரப் படுத்தினார். என் தம்பி ‘கார்டூன் நெட் ஒர்க்’கில் உட்கார்ந்து விட்டான். ஹாலில் காரியம் நடக்க அறைக்குள் டி வி வந்து விட்டது அவனுக்கு வசதியாயிருந்தது. நானும் பெரியப்பா பையனும் கம்ப்யூட்டரில் கார் ரேஸ் விளையாடினோம். தாத்தா படத்துக்கு முன்னால் நிறைய பழங்கள், பலகாரங்கள் எல்லாம் வைத்திருந்தார்கள். எதிரில் பெரிய வாழை இலைகளில் காரியம் செய்து வைத்த ஐயர்கள் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து கையைத் துடைத்துக் கொண்டவர் ஒருவரிடம் பெரியப்பா ஒரு தொகையைத் தட்டில் வைத்து நீட்டினார். “தோ பாருங்கோ ஸார்.. ஒரு மந்திரமும் தெரியாதவன் எத்தனையோ பேர் முனீர்கால சுத்திண்டிருக்கான். அவனையும் என்னையும் ஒண்ணா நெனெச்சிப் பிடாதேள். உங்களுக்கு சௌகரியப்படலேன்னா பணத்தை நீங்களே வெச்சுக்கோங்கோ.. மிச்ச காரியத்துக்கு வேற யாரையானும் பிக்ஸ் பண்ணிக்கோங்கோ” என்று பிகு பண்ணினார். பெரியப்பா மேலும் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வைத்ததும் அவர் தலையசைத்தபடி சிரித்த முகத்துடன் மற்றவர்களுடன் கிளம்பினார். நான் டெல்லிக்கு வந்தபின் பார்த்த முதல் டிவிஎஸ்50 அவருடையது.

“மாடியில காக்கா சாப்பிட்டிடுச்சான்னு பாருடா” அம்மா விரட்டினாள். முதலில் இலை நிறைய சோறும் பதார்த்தமும் வைத்து அப்பாவும் பெரியப்பாவும் ‘கா..கா..கா’ என்று கத்திய போது என் பெரியப்பா பையன் காதோடு காதாக ” இவங்க மொட்டை மண்டை வெய்யிலில பளபளன்னு டாலடிச்சா காக்கா பயந்து ஓடாது?” என்றது நினைவுக்கு வந்து சிரித்து விட்டேன். அம்மா காதை அழுத்தியே திருக மாடிக்கு விரைந்தேன். அடுத்த இரண்டு நாளும் அம்மா அடுக்களை-தூக்கம் என ஓட்டம். அப்பா ஆஃபீஸ், நான் கம்யூட்டரில், தம்பி டிவி முன். ஆனால் “காஸியாபாத்’தில் இருந்த மூன்று இரவும் பெரியப்பா பையன் ஹோலியின் போது அக்கம் பக்க வயசுப் பெண்களிடம் பையன்கள் செய்யும் சேஷ்டையில் ஆரம்பித்து, எஸ் எம் எஸ்ஸில் எப்படி லவ் மெசேஜ் தருகிறார்கள், மற்றும் க்ளாஸுக்குக் கட் அடித்து விட்டு எந்தப் பூங்காங்களுக்குப் போய் அதிக பட்சம் என்னென்ன செய்வார்கள் என்று விளக்க அடக்க முடியாத சிரிப்பை அடக்கியபடி இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.

ஒரு நாள் விடியற் காலை அம்மா என்னை எழுப்ப, போதாக் குறைக்கு ஐயர்கள் மந்திரம் ஓதும் சத்தமும் கேட்டது. ஸ்வீட், காரம், புதுத்துணி, நல்ல சாப்பாடு எல்லாம் கிடைத்தது. காலை பதினோரு மணிக்குள் டெல்லியில் அப்பாவின் ‘க்வாட்டர்ஸ்’ஸுக்கு வந்து விட்டோம். உடனே அப்பா ஆபீஸ் போய் விட்டார். வீட்டுக்கு வந்ததும் அம்மா புள்ளி வைத்துக் கோலம் போட்டு விளக்கை ஏற்றினாள். ஐந்து நிமிடத்திற்குள் வாயில் மணி அடித்தது. வீட்டு வேலை செய்கிற பெண் ஒருத்தி கருப்பாய் ஒல்லியாய் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் “ஐயா யாரையும் வேலைக்கி வெக்க மாட்டேன்னாரே, கோலம் போட்டிருக்கே” என்றதும் அம்மா அவளிடம் எல்லாவற்றையும் விளக்கி விரட்டி அடித்தாள். மாலையில் நடந்தவற்றைக் கேட்டதும் அப்பா விழுந்து விழுந்து சிரித்தார். அம்மா சிரிக்கவில்லை.

Posted in சிறுகதை | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -10

http://puthu.thinnai.com/?p=11615

முள்வெளி அத்தியாயம் -10

சத்யானந்தன்

Share

“டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். விபரீதமான எதையும் வெளியுலகில் அவர் செய்யாததால் காலப் போக்கில் அவர் மனம் சமனப் படும் வரை காத்திருப்பதே சிறந்தது. அவர் மன அழுத்தத்துக்கான காரணமும் பிடிபடவில்லை. இது ஆரம்ப நிலையே. மீட்க முடியாத நிலைக்கு ராஜேந்திரன் போகவில்லை. எனவே நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. டாக்டர் சங்கீதா ‘ஈமெயிலை’ லதாவுக்கு அனுப்பிய பிறகு நர்ஸ் ஸ்ரீகலாவை அழைத்தாள். “ஸ்ரீகலா. தமிழ் நல்லா வருமா உனக்கு/”
“பேஷன்ட்ஸ்கிட்டே பேசிப் பேசி நல்லாப் பாடம் ஆயிடுச்சு டாக்டர்.”
“உங்க ஊர்க்காரங்க நிறைய பேர் நல்லாப் பாடுவாங்களே.”
“கலாக்ஷேத்ராவில படிச்சவங்க என்னோட ரிலேடிவ்ஸ் நல்லாப் பாடுவாங்க டாக்டர்”
“பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ” இந்தப் பாட்டுக் கேட்டிருக்கியா ஸ்ரீகலா?”
“எம் எஸ் மீரா படத்தில பாடினது”
“இதை டிவி ஸீரியலுக்குப் பாடற ஒருத்தரைக் கண்டுபிடிப்பியா?”
” முடியும் டாக்டர். எங்க ரிலேடிவ்ஸ்ல ஒரு பொண்ணு ஸ்ருதி சுத்தமாப் பாடும்”
“குட். ஒரு டிவி ஸீரியல்ல நீ நடிக்கச் சான்ஸ் கிடைச்சா நடிப்பியா?”
“நெஜமாவா டாக்டர்?” ஸ்ரீகலாவின் முகத்தில் மெலிதான சிவப்பு.
“ஆமாம். உனக்கு சம்மதமா?”
“யெஸ் டாக்டர்’
“தமிழ் படிக்கத் தெரிஞ்ச ஒரு ஆள வெச்சு இந்தக் கதையைப் படி. டிவிக்காரங்க கூப்பிட்டு அனுப்புவாங்க’
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”, டாக்டர் கொடுத்த கத்தைப் பேப்பருடன் ஸ்ரீகலா நகர்ந்தாள்.
**__
**__**
** வாயிற்கதவு திறந்தவுடன் வேலைக்காரியை இடித்துத் தள்ளாத குறையாக ராஜேந்திரன் வெளியே வந்து படியிறங்கித் தோட்டத்தில் வைத்திருந்த தொங்கு கூடையில் அமர்ந்து ஆட ஆரம்பித்தான்.

வேலைக்காரி ஓடிப் போய் செக்யூரிட்டியிடம் “இவுரு மென்டலானதிலேருந்து ஒரே தல நோவு” என்றாள். வாட்ச்மேன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த ராஜேந்திரனை வீட்டுக்குள் வரச் சொல்லி மன்றாடியது பலனளிக்கவில்லை.

வாகனங்களின் பேரிரைச்சலுடன் அங்கிருந்து இங்கும் பின்னர் வேறு இடத்துக்கும் மக்கள் விரைந்து கொண்டே இருக்கிறார்கள். நகருவது வேறு ஒருவரை அல்லது ஒன்றை நகர்த்துவதற்காக. விரைவது சமூக வாழ்க்கையின் ஒயா விரைவுகள் தொய்யவே கூடாது என்று உறுதி செய்வதற்காக.

எதையேனும் தேடி ஓடுவது என்பது ஒன்று ; ஓடிக் கொண்டே இருந்தால் தேடிக் கொண்டே இருக்க ஏகப்பட்டது கிடைக்கும் என்பது ஒன்று. இப்படி ஓடுபவர்கள் நகரத்தில் வெளிப்படையாக ஓடுகிறார்கள். கிராமத்தில் ஓடாமலேயே ஓடுகிறார்கள். நகரத்தின் ஓட்டம் கிராமத்தில் கசிந்து பரவி விட்டது. நகரம் என்னும் நாணயத்தின் ஒரு பக்கம் ஓட்டம். மறுபக்கம் பாசாங்கான நாசூக்கு.

திடீரென ஊஞ்சல் நின்றது. மஞ்சுளா. “எதுக்கு வெளியே வந்தீங்க? ” ராஜேந்திரன் எதுவும் பேசவில்லை.

“வாங்க.. உள்ளே வாங்க.. நேரா பாத்ரூமுக்குப் போங்க.. ” அவனது கையைப் பிடித்து இழுத்து வீட்டுக்குள் அழைத்துப் போனாள். அவளுடன் வந்து தள்ளி நின்றபடி இருந்த இளைஞன் அவர்கள் பின்னாடியே போனவன் வாயிலில் தயங்கி நின்றான். “கம் இன் ஸைட். ஹீ மஸ்ட் கம் அவுட் க்ளீன் ஷேவன்.”
“யெஸ் மேம்”
ராஜேந்திரன் குளித்து வெளியே வந்ததும் அவனது தலை முடி ஒன்றை சோறு பதம் பார்ப்பது போல் தொட்ட மஞ்சுளா “குட். நல்லாத் துவட்டி விட்டிருக்கீங்க. அல்டர்னேட் டேஸ் மார்னிங்க் நேரா இங்கே வாங்க”
“யெஸ் மேம்”

தனது அறையில் நுழைந்ததும் ராஜேந்திரன் நாற்காலியில் அமர்ந்து எழுதினான்:

காற்று தன்னிச்சையாய்த்
திரிகிறது என்பது தோற்றம்
மேகத்தையும் மழையையும்
காற்றுதான் கட்டுப் படுத்தும்
என்பது மாயை
தோற்றம் மாயை
என்னும் ஆடைகளைப்
புனைந்து திரியும் உண்மை
தன்னிச்சையாய்
**__
**__**
** ஆஸ்பத்திரிப் படுக்கையில் ஒரு பெரியவர் கையில் காகிதங்களுடன் உரத்து வாசிக்க ஆரம்பித்தார். ஸ்ரீகலா பவ்யமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். “கதையோட தலைப்பு ‘அவசரம்’”.

காலை மணி ஏழு.
கதவைத் திறந்து ஷோபனா உள்ளே நுழைந்தாள். “சித்ரா இன்னும் எழுந்துக்கல்லியா?” ரமேஷ் பதில் சொல்வதற்குள் கழிப்பறைக்குள் சென்று விட்டாள்.அவள் வெளியே வந்து பல் துலக்குவதற்குள் ரமேஷ் காபி கலந்து விட்டான். அவள் நேரே படுக்கையறைக்குள் நுழைந்து சித்ராவை எழுப்ப அவள் அழுதபடியே எழுந்தாள்.

“சீக்கிரம் பல் தேச்சு பாத்ரூம் போயிட்டு வா.. இன்னும் அரை மணியிலே ஸ்கூல் வேன் வந்திடும்”

ரமேஷ் அவளிடம் காபி டம்ளரை நீட்டினான். “வேண்டாம் ரமேஷ். நான் லெமன் ஜூஸ் குடிக்கப் போறேன். நேத்திக்கி யூடெரஸ் ரிமூவ் ஆன லேடி நைட்டெல்லான் அனத்தித் தூக்கத்தையே கெடுத்திட்டா. நர்ஸ் பொழப்புப் பொழைக்கறத்துக்கு பதிலாக் குப்பை அள்ளலாம்”. ரமேஷ் பதிலேதும் சொல்லாமல் எலுமிச்சம்பழத்தைத் தேடி ‘ஃப்ரிட்ஜை’த் திறக்கும் போது ஒரு ‘ஸாஸ்’ பாட்டில் கீழே விழுந்து உருண்டது. நல்ல வேளை உடையவில்லை.

“பொறுமையாப் பண்ணுங்கப்பா. நீங்க எல்லாத்தையும் உருட்டிட்டு மெஸ் அப் பண்ணிட்டுப் ஆஃபீஸ் போயிடறீங்க. தூங்கி எழுந்து க்ளீன் பண்ணிட்டு சமைச்சு முடிக்கறத்துக்குள்ளே அவ வந்திடறா. அவளை கவனிச்சு டியூட்டிக்கிக் கெளம்பறத்துக்குள்ளே தாவு தீந்து போவுது”

சித்ரா தனது பள்ளிக்கூடச் சுமைப் பையில் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். ஷோபனா அவள் முதுகில் ஒரு அடிவைத்து “இப்ப என்னடி தேடறே? ராத்திரி ஃபுல்லா கார்ட்டூன் நெட் ஒர்க், அப்பாவோட கேரம்னு கொட்டம் போட்டுட்டு … போடீ பாத்ரூமுக்கு..” என்று அவளைப் பிடித்துக் கழிப்பறைக்குள் தள்ளினாள். வெளியே வந்த உடன் படுக்கையறைக்குள் இழுத்துச் சென்றாள். சீருடை அணிந்த சித்ரா ஹாலில் சம்மணமிட்டு அமர்ந்தாள். அவள் பின்பக்கமாக அமர்ந்த ஷோபனா அவளது தலைமுடியை பின்னத் தொடங்கினாள். “கூன் போடாதடி. நேரா உட்காரு” குழந்தையின் முதுகில் குத்தினாள். சித்ரா ஓ என்று அழத் துவங்கினாள். “அழாதடீ. கண்மை கரைஞ்சிடும்”

ரமேஷ் ‘நூடுல்ஸ்’ எடுத்து வரும் போது சித்ரா தனது ஸ்கூல் பையைச் சுற்றி புத்தகங்களைப் பரப்பி இருந்தாள்.

“டைம் ஆச்சேடா கண்ணு” என்றான் ரமேஷ். “அப்பா… நான் சாப்பிட்டுக் கிட்டே சொல்றேன். அந்த புக்ஸை மட்டும் எடுத்து உள்ளே வெச்சுடறியா?”

அவன் புத்தகங்களையும் பைக்குள் ஒழுங்கு செய்து முடிப்பதற்குள் ‘ஸ்கூல் வேன்’ ஹாரன் ஒலித்தது. “அப்பா லன்ச்சுக்கு ப்ரெட் வெச்சியா?”

“உடனே ரெடி பண்றேன்”. ஒரு தட்டின் மீது இரண்டு ரொட்டித் துண்டுகளை வைத்தான். அவை இரண்டின் மீதும் சீராக ‘ஜாமை’த் தடவினான். பிறகு வெண்ணை. ஒவ்வொரு ரொட்டி மீதும் மற்றொரு ரொட்டியை வைத்தான். அதற்குள் ஹாரன் சத்தம் இன்னும் நீண்டு இன்னும் ஓங்கி ஒலித்தது. ரொட்டியை இறுதியாகக் குறுக்காக வெட்ட வேண்டும். ஷோபனா குறுக்காக வெட்டி இரண்டு முக்கோணங்களாக அவற்றை பிசிறில்லாமல் கச்சிதமான முக்கோணங்களாய்க் கொண்டு வருவாள்.

கத்தியை வைத்து வெட்ட ஆரம்பித்தான். அழுத்தம் தாங்காமல் பீங்கான் தட்டு ஒரு புறம் சரிந்தது. இடது கையால் தட்டின் ஒரு பக்கத்தை அழுத்திக் கொண்டு ரொட்டி ஜோடியை வெட்டினான். அழுத்தி வெட்டிய வேகத்தில் ரொட்டியை வெட்டி முடித்து இடது கைக் கட்டை விரலுக்குக் கீழே உள்ளங்கை ஓரத்தில் கத்தி ஆழமாக இறங்கிவிட ரத்தம் குபுகுபுத்தது. தரையில் வழிந்தது. ” அப்பா.. ரத்தம்.. ” சித்ரா கீச்சிட்டாள். ” ‘உஸ்’ கத்தாதே.. அம்மா எழுந்தாத் திட்டுவா என்றபடி குளியலறைக்குள் புகுந்து ஒரு துண்டை ஈரப்படுத்தி கையில் சுற்றிக் கொண்டான். சென்ற வழியெல்லாம் ரத்தம். குழந்தை பயந்து ஓரமாக் நின்றாள். ஈரத்துணியைக் கையில் சுற்றிக் கொண்டு வெளியே வந்தவன் சமையலறைக்குச் சென்று அவளது ‘லன்ச் பாக்ஸி’ல் ரொட்டியை வைத்து, குடி தண்ணீர் பாட்டிலை நிரப்பி அவளது முதுகுப் பைக்குள் போட்டான். “ஷீவை வேன்லே போட்டுக்கோ” என்று அவளை வாரித் தூக்கிக் கொண்டு மறு கையில் ‘ஷீ’ ‘ஸாக்ஸ்’ இவற்றை எடுத்து குழந்தையின் முதுகுப்பையையும் கையில் மாட்டிக் கொள்ள முயன்ற போது ரத்தம் பீறிட்டுத் துண்டை நனைப்பது தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மாடிப் படிகளில் தடதடவென இறங்கி அவளை வேனுக்குள் ஏற்றிய போது ‘உன்னை மாதிரி நாலு பேரு இருந்தாப் போதும் என் பொளப்பு நடந்த மாதிரிதான்’ என்றான் டிரைவர்.

‘ஷோபனா ஊருலே இல்லியா? உங்க கையிலே என்ன ஆச்சி? ‘ என்றார் ஒரு பாட்டி. “ஒன்றுமில்லை” என்று வீட்டுக்குள் விரைந்தான்.

‘ஃப்ரிட்ஜை’ ஒற்றைக் கையால் திறக்கும் போது மறுபடி ‘ஸாஸ் பாட்டில்’ கீழே விழுந்தது. இந்த முறை உடைந்தது. நல்ல வேளை. கொட்டிய ‘ஸாஸி’லேயே நிறைய உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிக்கிக் கொண்டன. அதனால் அதிக தூரம் தெறிக்கவில்லை. ஹாலில் ‘ஸாஸ்’. சமையலறை முதல் குளியலறை வரை ரத்தம் என வீடே பயங்கரமாகக் காட்சி அளித்தது. ஷோபனா மட்டும் இப்போது விழித்திருந்தால் பெரிய ரகளை ஆகி இருக்கும்.

‘ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரி’லிருந்து ‘ஐஸ் ட்ரே’யை வெளியில் எடுத்தான். உணவு மேசை மீது வைத்து ‘ஐஸ் க்யூப்’ ஐ எடுக்க முயன்றான். வழுக்கித் தரையில் ஓடிச் சிதறின பனிக் கட்டிச் சில்லுகள்.. ஒரிரு பெரிய சில்லுகளை எடுத்து கையைச் சுற்றியிருந்த பருத்தித் துண்டை உதறி விட்டு, ‘வாஷ் பேசினி’ல் கையைக் காட்டிக் குழாயைத் திறந்து விட்டான். உறைந்தும் உறையாமலுமிருந்த ரத்தம் தண்ணீரோடு கலந்து ஓடியது. குபுகுபுவெனப் புதிதாக ரத்தம் கொப்பளித்தபடியே இருந்தது. ‘ஐஸை’ வத்து அழுத்திக் கையை அப்படியே மூடிக் கொண்டான். அதீத சில்லிப்பு வலி தருவதாக இருந்தது. சற்றே அயற்சியாக உணர்ந்தான். சோபாவில் அமர்ந்தான். குழந்தை பாதி ‘நூடில்ஸை’ சாப்பிடாமற் போனது வருத்தமாக இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து விரல்களை விரித்துப் பார்த்த போது ஒரு வழியாக ரத்தம் உறைந்திருந்தது.

தரை துடைக்கும் துணியை எடுத்து நனைத்து தரையில் உலர்ந்து கொட்டியிருந்த ரத்தக் கறைகளைத் துடைத்தான். இன்று அலுவலகத்துக்கு சீக்கிரம் போக வேண்டி இருந்தது. துணியில் ரத்தக் கறை பார்க்கக் கோரமாய் இருந்தது. அப்படியே குப்பைக் கூடையில் போட்டான். நினைவுக்கு வந்தவனாய் கையைச் சுற்றி ரத்தத்தை உறிஞ்சச் சுற்றியிருந்த பருத்தித் துண்டை குளியலறையில் வீசியிருந்த இடத்தில் இருந்து எடுத்தான். அது ரத்தத்தால் மிகவும் தோய்ந்து அசிங்கமாயிருந்தது. அதையும் குப்பைக் கூடையில் போட்டான்.

குளிப்பதும் உடையுடுத்துவதும் பெரிய சவாலாயிருந்தது. நடு உள்ளங்கை வரை பெரிய ஆழ்ந்த வெட்டு. எங்கே ரத்தம் மறுபடி பீறிட்டு வருமோ என்று உஷாராக இயங்க வேண்டியிருந்தது. சாப்பிடுமளவு பொறுமையும் நேரமுமில்லை. ரத்தம் பீறிடாமல் வாசல் ‘க்ரில் கேட்’டைப் பூட்டுவது பெரிய வித்தையாக இருந்தது. இரண்டு சக்கர வாகனத்தின் ‘நடு ஸ்டாண்ட்’டை விடுவித்து வண்டியில் ஏற முயன்ற போது கவனப் பிசகால் மீண்டும் ரத்தம் கசிந்தது. வண்டிக்கு ‘ஸைட் ஸ்டாண்ட்’ போட்டு விட்டு கையில் ‘கர்ச்சீஃபை’ சுற்றிக் கொண்டு தெருக்கோடியில் இருந்த 24 மணி நேர ‘க்ளினிக்’கில் நுழைந்தான்.

“கையில காயம் அர்ஜன்ட்” என்றான் வரவேற்பில் இருந்த பெண்ணிடம்.

“எல்லோருக்குமே அர்ஜன்ட் தான் ஸார். மண்டையிலே அடி பட்டவங்களே க்யூல இருக்காங்க. ஒரே ஒரு நர்ஸ்தான் கட்டுப் போடறது.. ஊசி போடறது எல்லாமே. வெயிட் பண்ணுங்க..” என்றாள்.

Posted in நாவல் | Leave a comment

வாசம்

சிறுகதை

வாசம்

சத்யானந்தன்

(கணையாழி ஜூலை 2006ல் வெளியானது)

“நீ இன்னாத்துக்குடா நாயே எம்மவனோட கார்டை வாங்கினே….” சரோஜாவின் குரல் ஓங்கிக் கேட்டது.

” இன்னாம்மா நீ… உன் பையன் சொல்லிக்கினா அந்த சிம் கார்டு நான் வாங்கினேன்னு ஆயிருமா?” பதில் சொல்வது தன் மகன் டில்லிபாபுதான்..தெரு முனை திரும்பி என்ன என்று விசாரிக்கும் வரை பொறுக்காது போல் தோன்றியது. பெட்டிக்கடை வழியே ஒரு இடைவெளி உண்டு. அதில் நுழைய முடியாமல் தலையை கழுத்து வலிக்க நீட்டி எட்டிப் பார்த்தாள். டில்லி பாபுவைச் சுற்றி சரோஜா, அவள் மகன் மாணிக்கம், எலெக்ட்ரீஷியன் செல்வா, டீக்கடைப் பையன் தினேஷு இன்னும் பல தலைகள் தெரிந்தன.

“டேய்…மூவாயிரம் ரூபா டெலிபோன் ஆபீஸ்காரங்க வந்து ஓலை வெச்சுட்டுப் போயிக்கிறாங்க.. எங்க செண்பகா வேலை செய்யுற வுட்டு அய்யிரு அத்தப் படிச்சுப் பாத்துட்டு பணம் கட்டலேன்னா கோர்ட்டு போலீஸுன்னு பேஜாராவுன்றாரு…”

‘இன்னாம்மா.. அத்தையே சொல்லிக்கினு.. உங்க பையன் லோகு என் கிட்டே ஒரு கார்டு குத்தான்.. ஆனா இரு நூறு ரூபா வாங்கிக்கினு தான் குத்தான். அது கூப்பன் போடுற கார்டு. அப்பப்போ கூப்பன் போட்டு பேசினேன். இப்போ என் கிட்டே இருக்கிறது வேறே.. எங்க முதலாளி குத்தது…”

“இன்னாடா நாயே நூலு நூக்கறே.. ” சரோஜா டில்லியின் சட்டையைப் பிடிப்பதைப் பார்த்து சுசீலாவால் சகிக்க இயலவில்லை.

“ஆருடி என் பையன் சட்டையிலே கையை வெக்கிறவ?” என்றபடி சந்தைத் தாண்டி விரைந்து சுசீலா காலனிக்குள் நுழைந்தாள். ரேசன் கார்டு பற்றி சண்டை இல்லை என்று புரிந்தது. டெலிபோன் ஆபீஸில் என்ன கார்டு தருகிறார்கள்?

“நீ கம்முனு இரும்மா..உனக்கு இன்னா தெரியும்?” டில்லி சுசீலாவை விலக்கினான். சரோஜாவைப் பார்த்து “சேட்டு இரு நூறு ரூபா குத்து என் கைலே வாங்கினான்..அவன் கைலேப் போய்க் கேளு”என்றான்.

“ராத்திரி லோகு வரட்டும்டா…தேவுடியாப் பையா.. உனக்கு இருக்கு..” என்றாள் சரோஜா.

“இன்னாடீ சொன்னே.. நீ பண்ணுடீ தொளிலு..உன் பையனை அனுப்பி ஆளை இட்டா..” சுசீலா சரோஜாவின் தலை முடியைப் பற்றினாள். ‘இது ஏதோ சரக்கு அடிச்சிட்டி ஒளருது’ என்று தன் தாய் சுசீலாவைப் பற்றி இழுத்தவாறு வீடு நோக்கி நகர்ந்தான். சரோஜாவின் வாயிலிருந்து மேலும் மேலும் வசவுகள் தாறு மாறாகத் தொடர்ந்தன.

முந்தா நாள் இரவு ட்யூட்டிக்குப் போனவன் டில்லி. திருப்பதிக்கு ஒரு குடும்பத்தை அழைத்துச் சென்று விட்டு இப்போது தான் வருகிறான். அவன் கொடுத்த லட்டை ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடியபடி “சோறு கீது.. மீன் கொளம்பு வாங்கியாறட்டா?” என்றாள் “வோணாம். அந்தப் பார்ட்டி ஓட்டல்ல வாங்கித் தந்தாங்க.. சட்டையைக் கழற்றி விட்டு அடி பம்புக்கு பக்கெட்டுடன் குளிக்கக் கிளம்பி விட்டான்.

டெலிபோன் கார்டு பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும். இவன் எதையும் சொல்ல மாட்டான். ஆனால் அடுத்தவளான சாந்தி அப்படியில்லை. வாக்காளர் அட்டைக்கு போட்டோ எடுக்க வருகிறார்கள் என்று விளக்கி அழைத்துப் போனாள். இவனைப் போல ஒன்பதாம் கிளாஸில் படிப்பை நிறுத்தாமல் பன்னிரண்டு கிளாஸும் படித்தாள். அப்பா அம்மா என்ற மரியாதை தெரிந்தவள். பெருங்குடி வரை நடந்தே போய் வருகிறாள். ஷேர் ஆட்டோவுக்கு “அஞ்சு ரூபாய்” கொடுக்காமல் மீதம் பிடிப்பாள்.

சரோஜாவின் கெட்ட வார்த்தை வசவு தாங்க இயலாமையில் தான் கபாலி கட்சியில் சேர்ந்து வீட்டருகே கொடியை நாட்டினான் குப்பமே வயிரெறிய. லோகு தனக்கும் கட்சியில் ஒரு வேலை கிடைக்குமா என்று டில்லியிடம் கேட்டான். “தோடா.. என்னையே என் நைனா இட்டுக்கல. அவரு கொட்டிவாக்கமின்னு நெனெக்காத.. ராயபுரத்தில தான் பார்ட்டி வேலை செய்யிறாரு…”

“யக்காவ்..” பக்கத்து வீட்டு மல்லிகா உலுக்கி எழுப்பும் போது வெய்யில் தாழும் நேரம். “இன்னாக்கா ஊட்டைத் தொறந்து போட்டுக்கினு தூங்குறே?”

“இங்கே இன்னாக் கீது?… கட்சி ஆபீஸு போஸ்டரும் கார்டுந்தான் கீது…”

“திருவான்மியூர் கோயில்ல தேரு… வர்றியா பாத்துட்டு வரலாம்..”

“கொஞ்ச நேரத்தில சாந்தி வந்திரும்.. அத்தே இஸ்திக்கினு வாரேன்..”

மதியம் படுக்கும் போதே வயிற்றை சுருக்கென வலித்தது.இப்பொஓது கொக்கி போட்டு இழுப்பது போல வலிக்கிறது. நாளை காலை முதல் வேலையாக கார்ப்பொரேஸன் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பு சாந்தி நடக்கும் தூரமோ ஷேர் ஆட்டோ தூரமோ ஏதேனும் டாக்டர் இருபது ரூபாய்க்குள் வாங்குகிற ‘பொம்பள டாக்டர்’ இடம் அழைத்துச் செல்வாள். துணி தைக்கிற பாக்டரி வேலை வந்ததும் காலையில் போனால் இருட்டுவதற்குள் வேகு வேகு என ஓடி வந்து சேரவே சரியாக இருக்கிறது. அவள் வந்ததும் டீ வாங்கி வரச் சொல்ல வேண்டும்.

வயிற்று வலி சொடுக்கி சொடுக்கி இழுத்தது. சாந்திக்கு முன் பிறந்த ஒன்று வயிற்றில் தங்காமல் கலைந்து போனது. மாதா மாதம் என்றே ஒரு கணக்கு இல்லாமல் உதிரப் போக்கு. வயிற்று வலியும் அவ்வப் போது சுருக் சுருக்கென்று கொல்லுகிறது. சாந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கோ ராயப் பேட்டைக்கோ அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கிறாள்.

இருட்டி விட்டது. எழுந்து மின் விளக்கை எரியச் செய்தாள். மணி என்ன இருக்கும்? வாசல் நிலைப் படியில் அமர்ந்து கொண்டாள். சாந்தி வந்தால் பசி பசி என்று பறப்பாள். எழுந்து சோறாக்க வேண்டும். எழுந்தால் இன்னும் வலிக்குமோ என பயமாக இருந்தது. பேப்பர் போடுகிற ராஜா கண்ணில் பட்டான். “டேய்.. மணி இன்னாடா?”

“ஏழரை ” வண்டியில் விரைந்தான்.

மணி ஏழரை ஆகி விட்டதா? என்ன ஆனாலும் சாந்தி இருட்டிய பிறகு வேலை முடித்து வர மாட்டாள்.

என்ன ஆகியிருக்கும்? நடந்து தானே வருகிறாள்? ஏனோ மீன் கூடையோடு அன்று ஒரு நாள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிணமாகக் கிடந்த பெண் நினைவுக்கு வந்தாள். அவளும் நடந்து தான் போய்க் கொண்டிருந்தவள்.

எப்படியும் சாந்தி வந்து விடுவாள். கூட வந்தவள் எவளாவது கடைவீதி, தேரு என்று இழுத்துப் போயிருப்பாள்.

தேக்ஸாவில் அரிசியைக் கழுவி அடுப்பில் சோறு வைத்தாள். டில்லி காஸ் வாங்கித் தந்ததில் சீக்கிரமே, கொதிக்க ஆரம்பித்தது. மறுபடி வாயிற்படியில் அமர்ந்து கொண்டாள்.

சினிமாப் பாட்டுச் சத்தம் பெரிதாகக் கேட்டது. ஹவுஸிங் போர்டு பக்கம் தேர்தல் கூட்டமாக இருக்க வேண்டும். ராயபுரத்தில் செய்கிற வேலையை கபாலி இங்கே செய்யக் கூடாதா? நாட் கணக்கில் வீட்டையே எட்டிப் பார்க்காமல் இருப்பதை விட அவ்வப் போது வந்து போகலாமே?

சோறு வெந்து விட்டது. கதவை மூடி விட்டு வெளியே நடந்தாள். வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. மாட வீதியை நெருங்க நெருங்க நடை பாதைக் கடைக்காரர்கள் கூவி விற்கும் சத்தம் நெருங்கி வந்தது. இருப்பிலிருந்த சுருக்குப் பையைத் திறந்து காசு எடுத்து ஒரு கடையில் டீ சாப்பிட்டாள். டீக்கடை கடிகாரத்தில் மணி எட்டரையானது தெரிந்தது.

திரும்பி வீட்டை நெருங்க நெருங்க கால் துவண்டது. வீடு பூட்டியே இருந்தது. சாந்தி இன்னும் வரவில்லை. பாயை விரித்துப் படுத்தாள்.

சாந்தியுடன் வேலை பார்க்கிறவர்களில் இருவர் இந்த வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். ஒருத்தி நீலாங்கரை. இன்னொருத்தி கேளம்பாக்கம். ஒருவர் டெலிபோன் நம்பரோ அட்ரஸோ தெரியாது. இது போல் அவள் தாமதமாக வந்ததுமில்லை. குப்பத்தில் இது பெரிய ரகளை ஆகி விடுமே? என்ன சொல்லி சமாளிக்கலாம் ? டில்லியை போன் பண்ணி வரச் சொல்லலாமா? வலி வெட்டி வெட்டி இழுத்தது. எவ்வளவு நேரம் தூங்கி இருப்பாள்? பின்னிரவில் புரண்டு படுத்த போது சாந்தி அருகில் இருந்தாள். அவள் தலையிலிருந்து மல்லிகைப்பூ வாசனையாய்.

Posted in சிறுகதை | Leave a comment

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

http://puthu.thinnai.com/?p=11428

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

சத்யானந்தன்

Share


30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:

கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை
கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக்
கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடி இருப்பதுண்டோ?

இந்த பத்தியில் ஜெயகாந்தன் வெகு ஜனத்தின் மனப்பாங்கை சுட்டிக் காட்டி விட்டார். ஒரு மாபெரும் தலைவரை நாம் வழிபடத் தயாராயிருக்கிறோம். அவர் வழி நடக்க நாம் தயாராயில்லை. ராஜா ராம் மோஹன் ராய், காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கர், பெரியார் இவர்கள் மாற்றங்களை, கிட்டத்தட்ட முழுமையான மாற்றத்தை, காலங்காலமாகப் புனிதம் என்று நடந்த மிகப் பெரிய அநீதிகளைக் களைந்து மேலான ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று பாடுபட்டார்கள். இன்று அவர்களை நாம் வழி படுவதோடு சரி. அவர்களது கொள்கைகளை அவர்களது பூத உடலோடு சேர்த்துப் புதைத்து விட்டு பழமை வாதமே பேசித் திரிகிறோம். இது தான் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும். இதற்குக் காரணம் என்ன? சமுதாய மாற்றமும் முன்னேற்றமும் சாத்தியம் என்னும் நன்னம்பிக்கை இல்லாதது ஒரு புறம். மறு புறம் இதெல்லாம் தலைவர்கள் வேலை என்னும் மனப்பாங்கு.

தன்னலமிகுதியும் பொறுப்பற்ற தன்மைக்கும் உதாரணம் கண்ணெதிரே உண்டு. சமூகத்தில் மரியாதை, ஏகப்பட்ட பணம் என்று கிடைத்தாலும் மருத்துவர்கள் நோய்க்கு மருந்து தருவதோடு நிறுத்திக் கொள்வார்கள். நோய்க்கான நிவாரணத்தை அதாவது சுகாதாரமான குடிநீர், உணவகங்களில் சுத்தமான உணவு, ரசாயனக் கலப்பு மிகுதியில்லாத ஆயத்த உணவுகள், குழந்தைகளுக்கு சத்தான ஆகாரம் இவற்றைப் பற்றி அரசாங்கத்திடம் வாதாட வேண்டாம். பத்திரிக்கையில் கடிதமோ கட்டுரையோ எழுதும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாம் எந்தத் துறையில் இருக்கிறாரோ அது சம்பந்தப் பட்ட சமூக ஒழுங்குகளில் கூட அக்கறையின்மை , அலட்சியம் இது.

இதே அக்கறையின்மை மற்றும் அலட்சியம் படித்தவர்களில் பெரும்பாலானவரிடம் இருக்கிறது. உறவு, அண்டை அயலார் இவர்களிடம் தன் ஜெம்பத்தை அளக்கும் பேச்சே தென்படுகிறதே தவிர் சமூக அவலங்கள் பற்றியோ சமூகம் ஒட்டுமொத்தமாக மாற வேண்டும் என்பது பற்றியோ யாராவது பேசுகிறாரா? ஊடகங்களா, நித்யானந்தாவை வைத்தே வருடக் கணக்கில் பரபரப்பு ஏற்படுத்தி விடும் அளவு வம்புகளில் காட்டும் அக்கறையை உருப்படியான விஷயங்களில் காட்டுவதில்லை.

இத்தகைய காரிருளில் ஒரு விடி வெள்ளியாக வெளிப்பட்டிருப்பவர் பெரியவர் அன்னா ஹஸாரே. ராணுவத்தில் சிறிய அளவு சேவகராகவே இருந்து, ஓய்வு பெற்ற பின் ரானேஜி காவ் சிந்தி என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம், நீர் சேமிப்பு ஆகியவற்றில் தொடங்கி மகாராஷ்டிர மாநிலத்தில் ஊழல் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்திப் போராடியவர். பின் சமூக ஆர்வலர்களால் இந்தியா முழுமைக்கும் விழிப்புணர்வு ஊட்டும் பணியைத் தொடங்கி உள்ளார். அந்த அமைப்பு ஒரு நன்னம்பிக்கைச் சின்னம். ஒரு அகில இந்திய அரசியல் சார்பற்ற அமைப்பை நடத்துவதில் உள்ள பிரச்சனைகள் அவர்களுக்கும் உண்டு. ஊடகங்களுக்கு அதுவே தீனி. ஏனெனில் மருத்துவர்கள் போலவே ஊடகங்களுக்கும் வரும்படியில் உள்ள ஆர்வம் உருப்படுவதில் கிடையாது.

அவர் ஒரு விடிவெள்ளி. விடிய வேண்டுமென்றால் மக்கள் விழிப்புற வேண்டும். அவர் மந்திரத்தில் மாங்காய் கொண்டு வரப்போகும் மந்திரவாதி என்றெண்ணுவது ஊழல் என்னும் நோய் நம் முன்னேற்றத்தின் ஆகப் பெரிய எதிரி என்பது நமக்கு புரியவில்லை என்பதற்கு அடையாளம். அன்னா ஹஸாரேயைக் கும்பிட்டுப் பயனில்லை. ஊழல் இல்லாத இந்தியா ஏன் வேண்டும்? எதனால் வேண்டும்? அது எப்போது சாத்தியம் என்னும் விவாதங்கள் சிந்தனைகள் தீவீரமடைய வேண்டும். எத்தனை தலைமுறைகள் தலைகுனிந்து வாழ்ந்து மடிந்து விட்டன. இனி வரும் தலைமுறையாவது உருப்படியாக வாழட்டுமே. ஒரு காலத்தில் தலைவர்கள் காமராஜர், கக்கன் போன்றோரும் அரசியலில் இருந்தார்கள். இன்று?

—————————-

அன்புடையீர், மூன்றாவது பத்தியில் “நோய்க்கான நிவாரணத்தை” என்பதற்கு பதில் “காரணத்தை” என்று பதிவு செய்து விட்டேன். கவனக்குறைவுக்கு வருந்துகிறேன். அன்பு சத்யானந்தன்

Posted in தனிக் கட்டுரை | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -9

http://puthu.thinnai.com/?p=11414

முள்வெளி அத்தியாயம் -9

சத்யானந்தன்

Share

“சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா.

“நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ”

“கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?”

“லுக் லதா. ஆஸ் அ டாக்டர் மட்டும் நான் இதைச் சொல்லலே. டூ யூ வாட்ச் யுவர் பிகர் இன் த மிர்ரர்?”

லதா சில நொடிகளுக்குப் பிறகு “பாஸ்ட் ஒன் மன்தா ஐ ஆம் நாட் அட் ஆல் கம்போஸ்ட்.”

“ஐ கான்ட் பிலீவ்”

லதா ஒரு துளி என்பது போல கண்ணாடிக் குப்பியில் இருந்த மதுவை அருந்தினாள்.

“உன் கிட்டே எவ்வளவு டைம் இருக்கு சங்கீத்?”

“கமான் லதா. உனக்காக எவ்வளவு வேணாலும் டைம் இருக்கு. பால்கனியிலே உட்காரலாமா?’

லதா செடிகள் நிறைந்த பால்கனியைத் தேர்ந்தெடுத்தாள்.

‘மூணு பக்கம் பால்கனிங்கறது ஒன்டர் ஃபுல் டிஸைன் இல்லே? ஹூ வாஸ் தட் ஆர்க்கிடெக்ட்?”

“ராஜேந்திரன். ஹீ ஈஸ் நாட் ஆன் ஆர்க்கிடெக்ட். பட் எ க்ரியேடிவ் மைன்டட் பர்ஸன்.”

‘ஐ உட் லைக் டு மீட் ஹிம்’

“யூ கான்ட் சங்கீத்”

“ஒய்?”

“அதப்பத்திப் பேசத் தான் உன்னை வரச் சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணினேன்”

லதா குரலின் நடுக்கத்தை கவனித்து சடேரெனத் திரும்பி சங்கீதா லதாவின் முகத்தைப் பார்த்தாள். கன்னங்கள் வரை கண்ணீர். “லதா வாட் ஈஸ் திஸ்? நீயா அழறே? ஐ ஹாவ் நெவெர் ஸீன் யு இன் டியர்ஸ்”. காங்கிரீட் சாய்வில் அமர்ந்திருந்த சங்கீதாவின் தோளில் சாய்ந்து விம்மி அழுதாள் லதா.

அவள் தலையைத் தடவியபடியே சங்கீதா “நீ மெயில்லே சொல்லியிருந்தது ராஜேந்திரனைப் பத்தித் தானா?” என்றாள். ஆமாமென்று தலையை அசைத்தாள் லதா.

“நான் தான் ரிப்ளையில சொல்லியிருந்தேனே சச் அஃபயர்ஸ் மீட் எ டெட் என்ட் ஸூனர் தேன் லேடர்”

“தட் ஈஸ் நாட் த இஷ்யூ நௌ”

“தென்?”

“ஒன் மினிட்”. அறைக்குள் சென்று திரும்பிய லதாவின் கையில் ஒரு கத்தைக் காகிதம். “இதப் படிச்சுப் பாரு”. “முடிச்சு” என்று தலைப்பிட்டிருந்த சிறுகதை.

**__
**__**
** காலை மணி ஆறு.
இன்றைக்கு மொஸைக் லோடு வரப் போகிறதென்றால் அன்பு தான் லாரியை ஓட்டியபடி வருவான். வளர்மதிக்கு அவன் வருகை மிகவும் நம்பிக்கை அளித்தது. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கலாவின் படிப்பு முடிந்து விடும். ரிசல்டுக்க்காகக் காத்திருக்கக் கூட வேண்டாம். அன்பு வீட்டைப் பொருத்த வரை அவனுக்குத் தங்கச்சி என்று யாருமில்லை. அக்காக்களைக் கட்டிக் கட்டிக் கொடுத்தாகி விட்டது. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. கூலிக்காரர்கள் யாராவது சொணங்கினால் ‘குடிகாரப்பயலுவளா’ என்று அதட்டுப் போடுவான். லாரிச் சத்தம் கேட்டதும் ஒரு டீத்தண்ணீயாவது அவனுக்கு வைத்துத் தர வேண்டும். அக்கா அக்காவென்று அவன் கூப்பிடுகிற அழகே தனி. கலாவை மனதில் வைத்துக் கொண்டு தான் கூப்பிடுகிறானோ என்று அவளுக்கு ஐயமுண்டு. கலா இப்போது தூங்கிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. புள்ளிகளை இணைத்து இணைத்து அழகான கோலமும் வந்து விட்டது. அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டாள். கோலப் பொடி டப்பாவை அதன் இடத்தில் வைத்தபடியே “ஏய் கலா.. எந்திரிடி. விடிஞ்சு மணி ஆறாயிடிச்சு. பொம்பளப் புள்ளே இன்னும் என்னடி தூக்கம்?”

“இன்னிக்கி ஞாயித்துக் கிளமைதானேம்மா…” போர்வைக்குள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள் கலா.

“ஒரு குடம் குடிக்கத் தண்ணி எடுத்தா. மீனு, மட்டனு எல்லாம் நீதான் வாங்கியாரணும். மசாலா அரைக்கவே எனக்கு நேரம் பத்தாதுடீ”

“கொஞ்ச நேரத்துல எந்திரிக்கறேம்மா. அங்கே அண்ணி வெறட்டரா. இங்க வந்தா நீயும் விட மாட்டேங்கறே”

“புள்ளைய எதுக்குடீ இப்பமே எளுப்பறே?” பின்னாலிருந்து ராசுவின் குரல் கேட்டது.

“இங்கின பஞ்சாயத்துக்கு ஆளில்லேன்னு புலம்பினாங்களா? கேட்டாண்ட போங்க. லோடு வர்ற நேரம் ஓணரும் வருவாரு..”

“ஓணரு அப்பா காலத்திலேயிருந்து எனக்கு சர்வீஸு. என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாரு..”

“அதானே ரொம்ப அள்ளிக் கொடுக்கறாங்க பாரு.. வயசுப் பொண்ணு… நாளைக்கிக் கட்டிக் கொடுக்கற எடத்தில இப்டித் தூங்கிக்கிட்டிருந்தா என்ன நெனப்பாங்க?”

“அவுளுக்கென்னடி இப்போ வயசாச்சு.. சின்னப் புள்ளே..”

“வவுத்துலே நெருப்பக் கட்டிக்கிட்டிருக்கிறது நான்யா… நீங்க வேணா அவள மடியில வெச்சுக் கொஞ்சுங்க.. மருமவ இப்பவே தன் சொந்தத்திலே இவளத் தள்ளி விடலாமான்னு பிளானு போடறா..”

அப்பா அம்மா சண்டை கலாவை எழுப்பப் போதுமானதாக இருந்தது. “முகத்தைக் களுவிக்கிட்டு வா சீக்கரம். தலையச் சீவி வுடறேன்.” லாரியின் ஹாரன் சத்தம் கேட்க ராசு வாசலை நோக்கி விரைந்தான்.

பத்து நிமிடங்களுக்குள் கலா குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். தேனீருக்கான ஏற்பாட்டை செய்து அடுப்பைத் தணித்து வைத்து விட்டு முன் வாசற்பக்கம் சென்றாள் வளர்மதி.

ஓணர் காரிலிருந்து இறங்காமலேயே ராசுவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். கூலியாட்கள் டைல்ஸை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். மேஸ்திரி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தான். லாரியின் முன்பக்கம் தரையில் அன்பு குனிந்த படி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. ” என்ன தம்பி வண்டியிலே ஏதும் ரிப்பேரா?” என்றாள்.

“ஒண்ணுமில்லேக்கா… இந்தத் துணி சிக்கிக்கிட்டிருக்கு அதை எடுத்துக்கிட்டிருக்கேன். நம்பர் பிளேட்டுக்கு அருகே ஒரு கருப்புத் துணி தொங்கிக் கொண்டிருந்தது. அதன் முடிச்சை அவன் நிரடிக் கொண்டிருந்தான்.

” டீக்கிச் சொல்லிடாதீங்க. நான் போட்டு வெச்சிரிக்கேன்..” என்றாள்.

“உங்க கையாலே டீ குடிக்கக் கொடுத்து வெச்சிருக்கணுன்க்கா” என்றான் வாய் நிறைய.

வளர்மதி தேனீரை பல டம்ளர்களில் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். அன்புவுக்கு முன்னர் அனைவரும் தானே முன் வந்து கோப்பைகளை எடுத்துக் கொண்டனர். அன்பு இன்னும் அந்தத் துணியுடன் போராடிக் கொண்டிருந்தான். “முதல்ல டீயைக் குடிங்க தம்பி. என்ன துணியீ அது?”

நம்பர் ப்ளேட்டை மறைச்சிக் கட்டினோம் . ரொம்ப நாளா ஒரு ட்ராஃப்பிக் போலீஸுக்காரன் துட்டையும் வாங்கிக் கிட்டுத் தொல்லையும் குடுத்துக்கிட்டே இருந்தான். அதான் நம்பர் ப்ளேட்டில துணியைக் கட்டிட்டு வண்டியால பின்னாடியிருந்து ஒரு தட்டுத் தட்டினேன். ”

“செத்துட்டானா?” என்றாள் வளர்மதி பதறியபடி.

“செத்திருக்க மாட்டான். ஹெல்மெட் போட்டிருந்தான். அவனோட மோட்டார் சைக்கிள் ரோட்டோரம் சரிஞ்சு கீளே விளுந்தான். எலும்பெல்லாம் நொறுங்கிருக்கும்.” இந்த முறை அவன் விரல்களில் முடிச்சு விடுபட்டு அவிழ்ந்தது.

**__
**__**
** “அவரு ரைட்டரா? அதான் அவரோட சேர்ந்து எமோஷனல் ஆயிட்டியா?” என்று வாசிப்பிலிருந்து தலையை நிமிர்த்தினாள் சங்கீதா. இப்போது லதாவின் முகம் இயல்பாயிருந்தது.

“கொஞ்சம் என்னோட இந்த் மோமெண்டோட ஸ்ட்ரெஸ்ஸைப் புரிசுக்க சங்கீத்”
“சொல்லு”
“இந்தக் கதையையும் சேத்து அவரோட இருபத்தினாலு கதை ஸீரியலா ஷூட் ஆகிக்கிட்டிருக்கு”
“நல்லது தானே”
“அது அவரு சுய நினைவோட இருந்தப்போ எனக்கு ரைட்ஸ் எழுதிக் கொடுத்தது”
“இப்போ என்ன ஆச்சு?”
“ஹீ ஈஸ் அன்டர் ட்ரீட்மென்ட் ஃப்ரம் பெசன்ட் நகர் டாக்டர் சிவராம்”
“ஃபேமஸ் சைக்யியாட்ரிஸ்ட் . எங்க அண்ணனோட ஃப்ரெண்ட்”
“அதான் சங்கீத். ராஜேந்திரனோட ப்ரஸென்ட் ஸ்டேடஸ் என்னன்னு நீ கேட்டு சொல்லணும்”
“டன். ஓகே? உன்னோட ஆக்ட்சுவல் ஸ்ட்ரெஸ் என்ன?”
“எங்க ப்ரெண்ட்ஷிப்பை பிஸினஸ் ஆக்கிட்ட மாதிரி ஒரு கில்டி ஃபீலிங்க்”
“டோன்ட் பீ ஸ்டுபிட்” என்றாள் சங்கீதா.

**__
**__**
** கட்டிலை விட்டு எழுந்தான் ராஜேந்திரன். கட்டில், மேஜை, நாற்காலி இவற்றுக்கும் எனக்கும் இரண்டு கால்கள் மட்டுமே வித்தியாசம். பயனைப் பொருத்து அவற்றிற்கு ஒரு அடையாளம். எனக்கு வேறு அடையாளம். வேண்டுமளவு வீட்டுக்குள் சிறைப்பட இயல்வது மட்டுமே ஒற்றுமை. அதனால் எனக்கும் அவற்றைப் போலவே வீட்டுக்குள் இடம் உண்டு. பயன்பாட்டு அடிப்படையிலான அடையாளத்துள் சிறைப்பட்டால் எங்கேயும் இடம் உண்டு.

பால்கனி கதவைத் திறந்து வெளியே பார்த்தான். தோட்டத்தில் ‘செக்யூரிட்டி’யுடன் வேலைக்காரி பேசிக் கொண்டிருந்தாள். வரவேற்பறைக்கு வந்து வாசற் கதவைத் திறக்க முயன்றான். வெளிப்பக்கமாய்ப் பூட்டியிருந்தது.

திரும்ப அறைக்குள் வந்து மேஜையில் அமர்ந்தான். காகிதங்களை வெகு நேரம் வெறித்துப் பார்த்தபடி இருந்தான். பிறகு எழுத ஆரம்பித்தான்.

தெப்பக் குளத்தில் கடைசிப் படி வரை
இப்போது இறங்க இயலும்
சேறும் சகதியும் எஞ்சின
நடுமண்டபத்தைச் சுற்றி
தவளைகளும் சிறுவர்களும்
துள்ளிக் குதித்திருக்க

**__
**__**
** அசோக் நகர் பூங்காவின் இடைப்பட்ட நடைபாதையில் அனேகர் நடை பயின்று கொண்டிருந்தனர்.

வெங்கடாசலம் பூங்காவைக் கண்களால் துழாவியபடியே உள்ளே நுழைந்தார். இடது பக்கம் உள்ள நடை பாதை வழியாக நடந்தபடியே இருந்தார். திரும்பும் இடத்தில் “வெங்குட்டு ஐயா.வாரும்” என்ற பரிச்சயமான குரல் கேட்டது. ரெங்கசாமியே தான்.

“உமக்காக இடம் பிடிச்சி எவ்வளவு நேரம் சாமி காத்திருக்கிறது?”

“வழக்கமா லேட்டா வருவீர். நான் இடம் புடிப்பேன். இன்னிக்கி என்ன விசேஷம்? கொஞ்சம் தெளிச்சலா இருக்கீரு?”

“விஷயம் இருக்கு வெங்குட்டு ஸார். ஒரு காலத்தில ஆபீஸில ரெக்ரியேஷன் கிளப்புல பாட்டுப் பாடினாக் கிண்டலடிப்பானுங்களே. இப்பம் நான் பாடின பாட்டு டிவியிலே வரப் போவுது”

“கையக் குடும். அப்படி என்ன பாட்டு பாடப் போறீர்?”

“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே. எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே….” பெரியவர் சற்றே உரத்துப் பாட ஆரம்பிக்க, பலரும் திரும்பிப் பார்த்தார்கள்.

Posted in நாவல் | Leave a comment