டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி- நடனக்கலையில் ஒரு சகாப்தம்


டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி- நடனக்கலையில் ஒரு சகாப்தம்

அக்டோபர் 2, 2012 காந்தி பிறந்த நாள் அன்று சென்னை நாரதகான சபாவில் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களின் 60 ஆண்டு கலைப்பணியும், நிருத்யோதயா என்னும் நாட்டியப் பள்ளியின் 70 ஆண்டு நிறைவும் ஒன்றாகக் கௌரவிக்கப்பட்டன. அந்த சமயத்தில் அவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் வில்லுப் பாட்டான “காந்தி மகான் கதை” யை நாட்டிய நாடகமாக அரங்கேற்றினார். அன்னியத் துணி எரிப்பு, உப்பு சத்தியாக்கிரகம், தேசப் பிரிவினை எதிர்ப்பு, மதுரை மீனாட்சி கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களின் ஆலயப் பிரவேசம் என காந்தியடிகளின் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளையும் அவரது துர்பாக்கியமான கொலையுண்டு மரிக்கும் காட்சியையும், அவரும் நிருத்யோதயா நடனப் பள்ளியின் 50 மாணவ மாணவியரும் அற்புதமாக நாட்டிய நாடகமாக அளித்தனர். வினீத் என்னும் சினிமா நடிகர் அவரது மாணவர். அவரும் நாட்டிய நாடகத்தில் பங்கேற்றார். சிறப்பாக நடனம் ஆடினார்.

சினிமா மற்றும் தொலைக்காட்சிகளால் கலை மிகவும் மலினப் படுத்தப் பட்டு கொச்சைப் படுத்தப் பட்டு வரும் இந்த கால கட்டத்தில் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அயராது கலைப் பணி ஆற்றி வருகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் வளர்த்து இன்று 70 ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நடனப் பள்ளி நிருத்யோதயா திரைப்பட இயக்குனரான அவரது தந்தை சுப்ரமணியம் அவர்களால் 1942ல் தொடங்கப் பட்டது. அவரது தாயார் மீனாட்சி இசைக் கலைஞர். முதலில் கௌசல்யா என்னும் ஆசிரியையிடம் நடனப் பயிற்சியைத் தொடங்கிய டாக்டர் பத்மா சுப்ரமணியம் பின்னர் வழுவூர் ராமைய்யாப் பிள்ளையிடம் பரத நாட்டியம் கற்றார். பின்னர் தண்டாயுதபாணிப் பிள்ளையிடம் அடவுகளையும், கௌரி அம்மாளிடம் அடவுகளையும் பயின்ற அவர் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட நடனக் கலைஞர்களிடம் 150க்கும் மேற்பட்ட அடவுகளைக் கற்றார். 1956ல் டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

இசையில் இளங்கலைப் பட்டம், எத்னோ மியுஸிகாலஜியில் பட்ட மேற்படிப்பு, நாட்டியத்தில் முனைவர் என்னும் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பின்னணியை கலைப் பணியோடு சேர்ந்து பெற்றவர் டாக்டர் பத்மா சுப்ரமணியம். அனேகமாக அவர் ஒருவரே இந்த அளவு ஆராய்ச்சியும் கலைப் பணி இரண்டும் என்னும் பெருமை கொண்டவர். இசையை பி.வி. லட்சுமணன் மற்றும் புகழ் பெற்ற ஹிந்தி இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி ஆகியோரிடம் பயின்றார். சிற்பக் கலையில் வல்லவரான அவர் சிவ பார்வதியின் 108 வடிவங்களை மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள நடராஜர் கோயிலுக்கென வடிவமைத்துக் கொடுத்தார்.

பரத நடனம் என்னும் கலையின் தொன்மையையும் தனித்தன்மைக்கு பெருமை சேர்க்கும் கலைப் பணி ஆற்றிய அவர் சமகாலத்தில் அது பரிட்சார்த்தமான மாற்றங்களை எடுத்துக் கொள்ளவும் வரலாற்று, தேசிய கதைகளை உள்வாங்கிக் கொள்ளவும் வழிவகுத்தார். தசைகோவ்ஸ்கியின் ரஷ்ய நாட்டிய இசையில் ஜடாயு மோட்சத்தையும், மியாகி மிசியோவின் ஜப்பானிய இசையில் கஜேந்திர மோட்சத்தையும் பரிட்சார்த்தமாக வடிவமைத்தார்.தாய்லாந்து நடனக் கலைஞர்களும் நம் கலைஞர்களும் இணைந்து டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் இயக்கத்தில் பாவை நோன்பு என்னும் திருப்பாவையின் நாட்டிய நாடகத்தை நிகழ்த்தினர். பரத நாட்டிய சாஸ்த்ரா என்று 13 பகுதி கொண்ட டாகுமெண்ட்ரியை தூர்தர்ஷனுக்காக எழுதினார். ரஷிய நாட்டிலும் ஜப்பானிலும் இவரது பணியை விளக்கும் டாக்குமெண்ட்ரி படங்கள் வெளியிடப் பட்டன.

பள்ளி மாணவியாய் இருக்கும் போதே மீனாட்சி கல்யாணம் என்னும் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார். 1970ல் கிருஷ்ணாய துப்யம் நமஹ என்னும் நாட்டிய நாடகம் கிருஷ்ண லீலையின் நாட்டிய வடிவமாக மட்டுமன்றி பரத நாட்டியமும் இந்தியாவின் பிற மாநில நடனக் கலைகளையும் ஒன்றடக்கியதாகப் புதுமையானதாக இருந்தது. 1963ல் நகருக்கு அப்பால் என்னும் நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்ட நாட்டியத்தை அரங்கேற்றினார். நாயன்மார் மூவர், வள்ளுவரும் வேத நெறியும், பகவத் கீதை இவை இவரது சமீபத்திய படைப்புக்கள். ராஜராஜ சோழனின் 1000வது பிறந்த தினத்தை தஞ்சை பெரிய கோவிலில் தமிழக அரசு மூன்று வருடம் முன்பு கொண்டாடிய போது ஆயிரம் பேருடன் இணைந்த நாட்டியத்தை நடத்தி சாதனை புரிந்தார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ, சங்கீத் நாடக அகாடமி  விருதுகள், தமிழகத்தின் கலைமாமணி, தமிழிசை சங்கத்தின் தமிழ் பேரறிஞர், சேக்கிழார் மன்றத்தின் திருமுறை நடனப் பேரரசி விருது, கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பரச நடன விலாச வித்தகி விருது, மத்தியப் பிரதேச அரசின் காளிதாஸ் விருது,  ரஷியாவின் நேரு விருது, Fukuoka Asian Cultural Prize என்னும் ஜப்பானிய விருது ஆகியவை இவருக்கு அளிக்கப் பட்ட விருதுகளுள் சில.

கலைக்காகத் தம் வாழ்கையையே அர்ப்பணித்து அற்புதமான கலைப்பணியை 60 வருடங்களுக்கும் மேலாக ஆற்றி வரும் டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி- நடனக்கலையில் ஒரு சகாப்தம்.

நன்றி:http://www.narthaki.com/info/profiles/profil10.html

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி- நடனக்கலையில் ஒரு சகாப்தம்

  1. Pingback: டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் கலைப்பணி

  2. Srinivasan K says:

    I am all admiration for her greatness in all aspects of life.

Leave a comment